Monday 23 May 2016

"நானறிந்த சுஜாதா" - முகநூல் பதிவுகள்

Bhaskaran Jayaraman
குவிகம் - இலக்கியவாசல் நடத்திய ' நானறிந்த சுஜாதா ' வித்தியாசமாய் இருந்தது. அவருடனேயே இருந்து, அவரையும் அவர் எழுத்துக்களையும் சுவாசித்த தேசிகன் அவர்களின் உரையாடல் ஆத்மார்த்தமானது. அமைதியாக, ஆழமாக அவர் அசைபோட்ட நிகழ்வுகள், அவரது மனதில் சுஜாதா உறைந்து போயிருப்பதைக் காட்டின. எழுத்துக் கூட்டி தமிழ் படித்தவரை, சிறுகதை எழுதுமளவுக்கு சுஜாதாவின் எழுத்தும்,மனிதமும் மாற்றியிருப்பதை அலங்காரமின்றிக் கூறினார் ! அவரது சிறுகதையை, சுஜாதா செதுக்கியதை சுவையாகச் சொன்னார் - அதுவே ஒரு சிறுகதை வாசிப்பதைப் போல் இருந்தது! சுஜாதாவின் மறுபக்கம் - எழுத்தாளனைத் தாண்டிய சுஜாதா என்னும் மனிதனின் பக்கம் - தேசிகனின் வார்த்தைகளில் அழகாகவும், அறிவார்த்தமாகவும், அன்பு சேர்ந்ததாகவும் இருந்தது! சுஜாதா வாசகர்கள் பொறாமைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது!!
ரகுநாதன் ஜெயராமன், தன் ' வாத்யார் ' பற்றி - அவரது எழுத்துகளைப் பற்றி, கடந்த,நிகழ்,எதிர்காலச் சிந்தனைகளைப் பற்றி - அவரது படைப்புகளில் இருந்து பல பகுதிகளைச் சொல்லி, அசத்தினார்! அவர் ஒரு சுஜாதா ' ready reckoner ' - சுஜாதா என்ற பெயரைக் கேட்டாலே முகத்தில் ஒரு செண்டிமீட்டருக்கு பிரகாசம் அப்புகிறது ! இல்லாத அத்தை பற்றிய தன் முப்பத்தாறு வரிக் கவிதையை வாசித்துவிட்டு, ' கடைசி ஒரு வரியைத் தவிர - இங்கே ஒரு pause - மற்ற வரிகளை நீக்கிவிடலாம் ' என்றாராம் ! சுஜாதாவுக்கு விருதுகளோ, ஒரு அங்கீகாரமோ கொடுக்கப் படாததில் வருத்தப் பட்டார். சுஜாதா வருத்தப் பட்டிருக்க மாட்டார் என்பது என் எண்ணம் - அவரது வாசகர் வட்டமும், அவரது அறிவின் வீச்சும், எழுத்தின் தாக்கமும் எந்த ஒரு விருதினையும் விட மிக, மிக, உயர்ந்தது !
எழுத்தாளர் நகுபோலியனின் சிறுகதை, தமிழ்த்தேனியின் தாய் பற்றிய கவிதைகள் நேரம், தரம் இரண்டுக்கும் உட்பட்டிருந்தன !
சுஜாதாவின் ' மாறுதல் ' நாடகத்தை நான்கு சுட்டிகள் - நான்கும் பெண் குட்டிகள் ! - அமர்ந்தவாறு நடித்து அமர்க்களப் படுத்தின ! என்ன மாடுலேஷன், உச்சரிப்பு - சபாஷ் !
இனிமையாய்க் கரைந்தது ஒரு மாலை வேளை - சுஜாதா என்னும் icon என்றுமே வசீகரம் நிறைந்தது !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு நான் அறிந்த சுஜாதாஎன்ற தலைப்பில் நேற்று என்னையும்Jayaraman Raghunathan பேச அழைத்திருந்தார்கள். பேசுவதற்கு முன் சின்ன குழந்தைகள் சுஜாதாவின் மாறுதல் வரும்என்ற நாடகத்தை உட்கார்ந்தே தேர்ந்த நாடக நடிகர்கள் போல பிசகு இல்லாமல் நல்ல மாடுலேஷனில் நடித்துக் காட்டினார்கள். பூர்ணம் நடிப்பது போலவே இருந்தது. ஜெயராமை கிட்டதட்ட பத்து ( இல்லை அதற்கு மேலும் இருக்கலாம் ) வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்.
ஹலோஎன்று கைகொடுத்தேன் யார் சார் நீங்க?’ என்பது போல பார்த்தார். கைவசம் இருந்த ஆதார்அட்டையைக் காண்பித்த பிறகு தான் நான் தேசிகன் என்று நம்பினார்.
ஜெயராம் ஒன்பதாவது படித்த போது சுஜாதாவிற்கு எழுதிய கடிதம், சுஜாதாவின் பல சிறுகதைகளிலிருந்து அவர் கையாண்ட நடை என்று பொலந்துக்கட்டினார். ராமாயணம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது அதே போல இருந்தது ஜெயராம் பேச்சு.
குவிகம் திரு சுந்தராஜன், திரு கிருபாநந்தன் இருவரும் வங்கியிலிருந்து ரிடையர் ஆனவர்கள் அவர்கள் மாதம் ஒரு முறை இந்த மாதிரி இலக்கிய நிகழ்வுகளை நடத்துகிறார்கள். வேறு சில இலக்கிய நிகழ்வுகளும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவை எல்லாம் ஹோட்டல் சாப்பாடு மாதிரி இவர்களும், புத்தக நண்பர்கள் நடத்தும் நிகழ்வுகளும் வீட்டுச் சாப்பாடு மாதிரி வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.
சுஜாதா நாடகத்தை நடித்த குழந்தைகள் யார் சுஜாதாஎன்று கேட்டார்கள். குழந்தைகளைக் குற்றம் சொல்ல கூடாது.
தேவன், கல்கி, எஸ்.வி.வி போன்றவர்களை மறந்துவிட்டோம், சுஜாதாவிற்கும் அந்த நிலமை வந்துகொண்டு இருக்கிறதே என்று பயமாக இருக்கிறது. ஷேக்ஸ்பியர் யார் என்று தெரிந்த இந்தக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சொல்லித்தர வேண்டாமா ? தமிழ் கூறும் நல் உலகம் திராவிட கட்சிகளின் ஹிந்தி எதிர்ப்புக்குப் பிறகு வெறியோடு ப்ராத்மிக் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 10, +12 மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற வெறியோடு படிக்கிறார்கள், ஆனால் பிற்காலத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லாமல் அவர்கள் ஒரு நல்ல campanionனை இழக்கப் போகிறார்கள் என்பது நிஜம். CBSE படிக்கும் தமிழ் உலகம் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகக் கருதுவதில்லை. எங்கள் குடும்பத்தையே எடுத்துக்கொண்டால் அடுத்த தலைமுறையினர், நல்ல படிக்கிறார்கள், உலக விஷயம், ஆங்கிலம் என்று பல விஷயங்கள் தெரிகிறது ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது ஆங்கிலத்தில் இருந்து தான் திருப்பாவையே மனப்பாடம் செய்கிறார்கள் என்பது தான் சோகமான உண்மை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Jayaraman Raghunathan
நானறிந்த சுஜாதா தேசிகன்!!
நேற்று நடந்த குவிகம் நானறிந்த சுஜாதாபற்றி தேசிகன் எழுதிவிட்டார்.அவரேஎழுதினால் மாதிரி ரத்தினச்சுருக்கமாக.
ப்ரெவிடி இல்லேன்னா கயை ஒடிஎன்பார் வாத்யார். அவரிடம் அட்சரயாப்யாஸம் பயின்ற விற்பன்னர் தேசிகன். ஒரு சிறுகதை எழுதுவது எப்படி என்பதை பிராக்டிகலாக அவர் சொல்லிக்கொடுத்ததை தேசிகன் விவரித்தபோது அருகில் என் முகத்தில் ஓடிய பொறாமையை அந்த கடைசி இடது ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தாரே, அவர் கூட கவனித்து இருக்க முடியும்.
தேசிகன் அவரின் ஆத்மார்த்த, அத்யந்த நண்பராக இருந்திருப்பது அவரின் முன் ஜென்மப்பயனே! அவருடன் புத்தகங்களைப்படித்து, குறிப்புக்கள் கொடுத்து, இண்டெக்ஸிங் பண்ணி, சித்திரம் வரைந்து, அபார அனுபவ ஞானம்.
இந்தக்கதையை நான் எழுதியிருகேனா என்ன, எதுக்கும் தேசிகனை ஒரு வார்த்தை கேட்டுடுங்கஎன்று வாத்யார் சொல்லுமளவுக்கு ஒரு ஆசாமி இருந்தால் பொறாமை வராதா என்ன!
டாக்டர் பாஸ்கரன ஜெயராமன் வருகை ஒரு எதிர்பாராத சந்தோஷம். அவரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
கையெழுத்திட்ட ஒரு காப்பி எனக்கு ரிசர்வ் பண்ணி வெச்சிடுங்க, டாக்டர்!
தேசிகன் சொல்லும் இந்ததமிழ் படிக்கும் வழக்கம் அருகிக்கொண்டு வருவது சோகமே! ஏதானும் செய்யவேண்டும் என்று கிருபாநந்தன் சொன்னார். இந்த குவிகம் இரட்டையர் நிச்சயம் செய்துவிடுவார்கள்.
நீ தேசிகனை மீட் பண்ணியிருக்கியோ?”
சுஜாதா என்னை ஒரு முறை கேட்டபோது இல்லை சார் என்றேன். அடுத்த முறை நீ வரும்போது நம்பர் தரேன், பேசுஎன்றார். அந்த சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. சுஜாதா இறந்த பிறகுதான் நாங்கள் சந்தித்தோம்.
ஒரே ஒரு தரம் சரவணா ஹோட்டலில் சந்தித்திருந்தாலும் இப்போது இவர் அநியாயத்திற்கு இளைத்து சிக்கென்று என்னை விட இளமையாக இருப்பார் என்று நான் எதிர்ப்பார்க்காததால் ஆதார் அட்டை வரை போக வேண்டியதாகிவிட்டது. இப்போது கூட அவர் ஆதார் காப்பிதான் காண்பித்தார். ஒரிஜினல் கேட்டிருக்கிறேன்!
என் பெயரைக்குறிப்பிட்டுமறக்க முடியாத கடிதங்கள் என்று சுஜாதா எழுதின கல்கி இதழைக்கண்டு பிடித்து (1979 என்று நினைக்கிறேன்) எனக்கே எனக்கு கொடுப்பவர்களுக்கு (ஒரு ஃபோட்டோ காப்பி எடுத்துக்கொண்டு தந்து விடுகிறேன்) என் ராஜ்யத்தில் பாதியையும் கொடுத்து என் பெண்ணையும் கல்யாணம் செய்து தருகிறேன் என்று சுஜாதா ஒரு முறை சொன்னதை நானும் இங்கேவழி மொழிகிறேன்.
மிக இனிமையான சுஜாதா சுஜாதாவெனக் குவிந்த மாலை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

No comments:

Post a Comment